பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது பயணியாக வந்த பெண்மணி தொலைத்த இயர்போட்ஸை மீட்க உதவிய சம்பவம் இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தர்ஷன் என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், பயணி பலக் மல்ஹோத்ராவுடன் ஒன்றரை மணி நேரம் செலவழித்து, மற்றொரு பயணியால் எடுக்கப்பட்ட அவரது இயர்போட்ஸை மீட்டெடுக்க உதவினார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலக் தனது X தளத்தில் பகிர்ந்து, தர்ஷனின் உதவிக்கு நன்றி தெரிவித்தார், இதனால் இந்த கதை வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 11, வியாழக்கிழமை அன்று, ஆட்டோவில் பயணித்தபோது தனது இயர்போட்ஸை தொலைத்ததாக பலக் X-இல் பதிவிட்டார். ‘Find My Device’ வசதி மூலம் இயர்போட்ஸின் நேரடி இருப்பிடத்தைக் கண்டறிந்த அவர், மற்றொரு ஆட்டோவை முன்பதிவு செய்து, ஓட்டுநர் தர்ஷனிடம் உதவி கேட்டார்.

தர்ஷன், மற்ற பயணங்களை ரத்து செய்துவிட்டு, ஒன்றரை மணி நேரம் மூன்று இடங்களுக்கு அவருடன் சென்று, சைகைகள் மற்றும் தெரிந்த கன்னட வார்த்தைகளால் பேசி, இயர்போட்ஸை மீட்க உதவினார். தர்ஷன் ஆங்கிலமோ, இந்தியோ சரளமாக பேசத் தெரியாத நிலையில், “கன்னடம் கோத்தில்லா” என்று மட்டுமே தனக்குத் தெரிந்த கன்னடத்தில் பலக் பேசியதாகவும், இறுதியில் ஒரு கப் இஞ்சி டீயுடன் பத்து நிமிடங்களில் ஏர்போட்ஸை மீட்டதாகவும் பலக் பதிவிட்டார்.

தர்ஷன், பி.காம் பட்டதாரியாக இருந்து, தனது எம்பிஏ படிப்பிற்காக சேமித்து வருவதாகவும், தற்போது தனது தந்தையின் ஆட்டோவை ஓட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த பதிவு, பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்களும் இரக்கமும் உதவும் மனமும் கொண்டவர்களாக இருக்க முடியும் என்பதை நிரூபித்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.