தமிழ்நாடு சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக மாநில பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து ஓ பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். இருப்பினும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பன்னீர்செல்வம் கேட்டிருந்தால் பிரதமர் தமிழகத்திற்கு வந்தபோது உடனடியாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். கட்சியிலிருந்து பன்னீர்செல்வம் வெளியேறியது சொந்த பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
மேலும் அவர் முதல்வரை சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்சினைகளுக்காக இருக்கலாம். ஆனால் இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை அது மிகவும் தவறான கருத்து இவ்வாறு அவர் தெரிவித்தார்.
