வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், ஆளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார், அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி வைப்பதற்கு “0.1% கூட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தப் பேச்சு, எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது. மேலும், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நடிகர் விஜய்தான் என்றும், அவரை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நிர்மல் குமாரின் இந்தக் கறாரான அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய கூட்டணிச் சமன்பாடுகள் உருவாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, அ.தி.மு.க.வின் முக்கியப் பதவியில் இருந்து பிரிந்து சென்று, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர், தற்போது தி.மு.க.வை வீழ்த்தி, இ.பி.எஸ்.ஸையும் அரசியலில் ஓரங்கட்டும் நோக்கில், நடிகர் விஜய் தலைமையில் அமையக்கூடிய கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயார் என்று தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள நிலையில், இந்த இரு தலைவர்களும் அரசியல் ரீதியாகப் பலம் பெற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.