தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் 3 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைக்க டெல்டா பகுதிகளில் எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதல்வர் ஸ்டாலின் கூறியதை அடுத்து தற்போது மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்களை ரத்து செய்தது போன்று கடலூரிலும் தடை செய்ய வேண்டும். நாங்கள் என்எல்சி நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக 40 வருடங்களாக போராடி வருகிறோம். அது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஆகும். எனவே தமிழ்நாட்டு மக்களின் நலனை மதிக்கும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, என்எல்சி நிலக்கரி சுரங்க திட்டத்தையும் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.