தமிழ் திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமான கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ,அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது. தற்போது படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கூறியதாவது,”கண்டிப்பாக நடிகர் அஜித் சாரை வைத்து திரைப்படம் இயக்குவேன் இது 100% உறுதி.

அதற்கான பேச்சு வார்த்தையே இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது எனக்கும் அவருக்குமான ஒரு டைம் லைன் வரும் போது கண்டிப்பாக அந்த வாய்ப்பு அமையும். அந்த படத்தை நான் இயக்குவேன்”என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.