தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வவிடுதி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருகு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவும் பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யாவும் நவீனும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப் குரூப்பில் பரவியது. இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என ஐஸ்வர்யாவின் பெற்றோர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர்.

பின்னர் போலீசார் தரப்பில் பேசி ஐஸ்வர்யாவை மட்டும் அவரது தந்தையும், உறவினர்களும் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். கடந்த 3-ஆம் தேதி ஐஸ்வர்யாவை அடித்து கொலை செய்து உடலை போலீசாருக்கு கூட தெரியாமல் எரித்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்த நவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது அவரது சாம்பல் கூட இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, இந்து ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ஐஸ்வர்யாவை அடித்துக் கொலை செய்தது உறுதியானது. இதற்கிடையே ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு மாறாக பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா ஐஸ்வர்யாவை அவரது பெற்றோருடன் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் காவல் ஆய்வாளர் முருகையாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.