திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கப்பல் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகளான செல்வ பிரகாஷ் மற்றும் சவட முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது முருங்கை மரங்களை கம்பளி முழு மற்றும் இலை புழு போன்றவைகள் தாக்கும். இந்த மரங்களுக்கு மருந்து தெளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் தற்போது தானியங்கி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தானியங்கி மெஷினை டிராக்டரில் வைத்துவிட்டு மெஷினின் இரு பக்கங்களில் உள்ள குழாய்களின் மூலமாக சொட்டுநீர் பாசனம் போல் முருங்கை மரத்தில் மருந்தை பீய்ச்சி அடிக்கிறது. இந்த மெஷின் மூலம் 4 ஏக்கர் நிலத்தில் உள்ள முருங்கை மரத்திற்கு 1 மணி நேரத்தில் மருந்து தெளித்து விடலாம். இதனால் நேரம் மற்றும் கூலி ஆட்கள் செலவு போன்றவைகள் மிச்சமாகிறது. மேலும் இந்த மெஷின் மூலம் 8 மணி நேரத்தில் 30 ஏக்கர் வரை மருந்து தெளிக்கலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள்.