நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டியை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வென்ற நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்விக்கு பிறகு ரசிகர்கள் பாகிஸ்தானை குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததால் அந்த அணியின் வீரர் குஷ்தில் ஷா திடீரென வேலியைத் தாண்டி ரசிகர்களை தாக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். அவர் ரசிகர்களுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

 

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வெளிநாட்டு ரசிகர்கள், குறிப்பாக ஆப்கான் ஆதரவாளர்கள் பஷ்தோ மொழியில் பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்பட்டுள்ளது. குஷ்தில் ஷா அந்த ரீதியான வார்த்தைகளை எதிர்த்தபோது, அவர்கள் மேலும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும்  பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்ததையடுத்து, அரங்க அதிகாரிகள் அந்த இரு ரசிகர்களையும் வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.