சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி நினைத்திருந்தால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நான் கொண்டு வந்திருக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்களாக தான் அனைவரையும் பார்க்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அப்படித்தான் எல்லோரையும் பார்த்தார். ஒரு ஏழைக்கும் எம்எல்ஏ சீட் கொடுத்து அவரையும் அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. நாங்கள் அனைவரும் அப்படி வளர்க்கப்பட்டவர்கள் தான். என்னுடைய வழி தனி வழி. என்னை பற்றி புரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஒரு காலம் வரும். ஏப்ரல் 24-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் உங்களிடம் சொல்லாமலா நான் சென்று விடப் போகிறேன். அழைப்பு வரட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் எந்த நேரத்தில் எதைப் பற்றி பேச வேண்டுமோ அதை பேசாமல் விட்டு விடுகின்றனர் என்றும்‌கூறினார்.