உஸ்பெகிஸ்தான் தாஷ்கன்ட் நகரில் நடந்து வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் போன்றோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப் பிரிவில் தீபக் போரியா கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 எனும் புள்ளி கணக்கில் வீழ்த்தினார். அதோடு 57 கிலோ எடை பிரிவில் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

அதேபோல் 71 கிலோ எடைப் பிரிவில் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 எனும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இதன் வாயிலாக 3 பேருக்கும் குறைந்தது வெண்கல பதக்கம் உறுதியாகியது. மேலும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இந்திய குத்து சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதிசெய்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த 2019ம் வருடத்தில் மணீஷ் கவுசிக் வெண்கலம் மற்றும் அமித் பங்கால் வெள்ளி பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.