தமிழ்நாட்டில் வீடு, குடிசை மற்றும் விவசாயம் மின் இணைப்புகளுடன் ஆதாரை  இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி 99 விழுக்காடு மக்கள் ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாகவே சமூக வலைதளங்களில் ஒரே குடியிருப்பில் அல்லது ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைப்பதற்காக தான் ஆதாருடன் மின் அட்டை இணைப்பு நடைபெறுவதாக கருத்துகள் பரவி வந்தது.

ஒரே குடியிருப்பில் வசிக்கும் அனைவரின் மின் இணைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டால் மின் கட்டணத்தை வாடகைக்கு குடியிருப்பவர்களிடமிருந்து பிரித்து வசூலிப்பது உரிமையாளர்களுக்கு சிக்கல் என்றும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதிகமான மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் அச்சம் மக்களிடம் நிலவியது. இதற்கு தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள்  முற்றிலும் போலியானது.

ஒரே நபரின் பெயரில் ஒரே குடும்பத்தினர் உபயோகிக்கும் மின் இணைப்புகள் இருந்தால் அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில நிர்வாக காரணங்களால் மேற்படி பணியை தொடங்குவதற்கு கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது ‌