தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைத்து பயனர்களும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சில முறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் அதை மாற்றி ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டும் தர வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியதாக புதிய தகவல் பரவியது. இதனால் 100 யூனிட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்பட்டது.

அது மட்டுமல்லாமல் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்று இணைக்கவே ஆதார் மின் இணைப்பு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைத்தளங்களில் பேசப்படும் இந்த கருத்துக்கள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார். பிப்ரவரி மாதத்தோடு ஆதார் மற்றும் மின் இணைப்பு அவகாசம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.