கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளை பகுதியில் பிரவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ஐரேனியயபுரத்தைச் சேர்ந்த தேவா, அபிஷா தம்பதியினர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினர்.

இதேபோல பிரஜா என்பவரிடம் 10 லட்சம் ரூபாயும், அரவிந்த் என்பவரிடம் 14 லட்சம் ரூபாயும், ராஜ்குமார் என்பவரிடம் 12 லட்சம் ரூபாயும் அவர்கள் வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த 56 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப தருமாறு கேட்டோம் ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று பெங்களூரில் பதுங்கி இருந்த தேவா, அபிஷா தம்பதியினரை கைது செய்து நாகர்கோவிலில் இருக்கும் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட தேவா மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்ப்பதும், அபிஷா பெங்களூரில் குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருவதும் தெரியவந்தது.