ரயில்களிலும் ரயில் நிலைய வளாகத்திலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது தனி ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததால் தென் மாவட்டங்களுக்கு வரும் ரயில்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த தகவலின் படி ஓகா வாராந்திர எக்ஸ்ப்ரஸில் பொதுபெட்டியில் ஒரு பயணி கியாஸ் சிலிண்டரை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுர்ஜாராம்(33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கொண்டு வந்த 5 கிலோ கியாஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.