மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மனித நேயத்தையே உலுக்கும் வகையில் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குவாலியரின் தகி மண்டி பகுதியில் ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தரான ஊர்மிளா பதாரியா (70) என்பவர், தனது மகன் அகண்ட் பிரதாப் மற்றும் மகள் ரிது ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ஊர்மிளாவின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கவனித்த பால்காரர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஊர்மிளா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

விசாரணையில், ஊர்மிளா இறந்து சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும், அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

ஆனால், அவரது பிள்ளைகள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், தனது தாய் இறந்தது கூடத் தெரியாமல் அழுகிய பிணத்துடனேயே 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

போலீசார் ஊர்மிளாவின் உடலை மீட்கச் சென்றபோது, அவரது மகன் அகண்ட் போலீசாரைத் தடுத்துப் போராடியது பார்ப்பவர்களின் கண்களைக் கலங்க வைத்தது.

பின்னர் அவருக்குப் புரிய வைத்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படிப்பு இருந்தும் மனநிலை சரியில்லாத காரணத்தால், பெற்ற தாயின் மரணத்தைக் கூட அறியாமல் பிள்ளைகள் சடலத்துடன் வாழ்ந்த இந்தக் கொடூர சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.