நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டி20 கிரிக்கெட்டின் ஃபிரான்சைஸ் லீக் ஆன மேஜர் லீக் கிரிக்கெட்டின் (எம்எல்சி) முதல் சீசன் நடந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மும்பை நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், வாஷிங்டன் ப்ரீடம், சியாட்டில் ஓர்காஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐபிஎல் போன்று அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் இது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்கு பாப் டு பிளெசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 5 லீக் ஆட்டங்களில் 3 வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்றுள்ளது. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான 171 ரன்களை 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிகரமாக சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக மிலிந்த் குமார் 42 பந்துகளில் 52 ரன்களையும், டேனியல் சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்களையும் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மிலிந்தும், சாம்ஸும் இணைந்து அணியைக் காப்பாற்றினர். இதன் மூலம் அந்த அணி வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு ஃப்ரான்சைஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் சூப்பர் கிங்ஸ் குடும்பம் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு சீசனில் தென்னாப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடரில்  ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதி வரை சென்று விளையாடியது. தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

https://twitter.com/TexasSuperKings/status/1683734422775005187