தமிழக அரசியல் வரலாற்றில் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் இணைவதும், பின்னர் இடைத்தேர்தலைச் சந்திப்பதும் புதிய ஒன்றல்ல. முன்னதாக, அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதேபோல், கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 29 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக-வில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது தேமுதிக-வின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் தேமுதிக தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

தொடர்ந்து, 2013-இல் தேமுதிக எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் அக்கட்சியை விட்டு விலகி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இதே பாணியில், கடந்த ஆண்டு அதிமுக-விலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்தனர்.

தொடர்ந்து நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், அவர்கள் மூவரும் திமுக சார்பில் அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வந்தாலும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.