மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை உறுதி செய்யும் விதமாக சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் கொள்கைகளை அமல்படுத்துவது தேவையான அடிப்படை வசதிகள் குறை தீர்ப்புக்கான பெண்கள் பாதுகாப்பு குழு அமைத்தல் மற்றும் கண்காணிப்பு போன்ற வழிகாட்டுதல்களை உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு வழங்கியுள்ளது.
அதேபோல் சானிட்டரி நாப்கின்களுக்கான குப்பை தொட்டிகள், தண்ணீர் வசதி போன்ற அடிப்படை சுகாதார வசதிகளுடன் தூய்மையான தனி கழிவறைகள் பெண்களுக்கு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதனை அனைத்து நேரங்களில் பயன்படுத்தும் விதமாக தூய்மையாக வைத்திருக்கவும், தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாதவிடாய் சுகாதார மற்றும் கழிவு பொருட்களை சரியான முறையில் அகற்றுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு தகுந்த எரியூட்டிகளை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல் மற்றும் மாற்று பயன்பாட்டிற்கான மற்றும் தன்மையுடைய பொருட்கள் பற்றி ஆராய்ச்சியை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.