விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 143 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விமான போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் வி.கே.சிங்  பதில் அளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவின் போக்குவரத்து விமான ஆணையம் சார்பில் வகுக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து விதிகளின் கீழ் விமான நிறுவனங்களில் உள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இடையூறு செய்யும் பயணிகள் பயணிக்க தடை விதித்து அவர்கள் அனைவரும் பயணிக்க தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இதுவரை 143 பேருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2017 -ஆம் ஆண்டில் ஒருவரும், 2020 ஆம் ஆண்டு 10 பேரும், 2021 -ஆம் ஆண்டு 66 பேரும் கடந்த ஆண்டில் 63 பேரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த வருடம் இந்த பட்டியலில் இணைந்த 63 பேரில் 46 பேர் இண்டிகோ  நிறுவனத்தாலும், 16 பேர் விஸ்டாரா  நிறுவனத்தாலும், ஒருவர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தாலும் தடை விதிக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.