மும்பையின் மட்டுங்கா பகுதியில், எஸ்ஐஇஎஸ் பள்ளி அருகே உள்ள கிங்ஸ் சர்க்கிளில் இயந்திர கார் பார்க்கிங் அமைப்பு திங்கட்கிழமை (செப்டம்பர் 15, 2025) இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், பார்க்கிங் அமைப்பு இடிந்து, வாகனங்கள் குழியில் விழுந்து நொறுங்கிய காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பராமரிப்பு இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து, இயந்திர பார்க்கிங் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். “பராமரிப்பு மற்றும் தரசோதனை இல்லாதது இந்தியாவில் பெரும் பிரச்சினையாக உள்ளது,” என ஒரு பயனர் குறிப்பிட்டார்.

மற்றொரு பயனர், “தரமற்ற கட்டுமானத்தை கொலை முயற்சியாக கருத வேண்டும்,” என வலியுறுத்தினார். மும்பை காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பலர், இயந்திர பார்க்கிங்கிற்கு பதிலாக பாரம்பரிய ராம்ப் அடிப்படையிலான பார்க்கிங் அமைப்புகளை பரிந்துரைத்து, கட்டுமான நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள் தேவை என வலியுறுத்தியுள்ளனர்.