நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால் அடித்து கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹைதர் கடும் கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 42 வயதான அஸ்மா கான் ஒரு மென்பொருள் பொறியாளராக நொய்டா செக்டர் 62ல் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

முன்னதாக இவர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்துள்ளார். ஹைதர் பீகாரை சேர்ந்தவர், அவரும் பொறியியல் பட்டதாரி என்றாலும் தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். இருவரும் 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தின் போது மகன் 112 எண்ணை அழைத்துப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது. அஸ்மா கானின் உடல் மரண பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, ஹைதர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை,” என அவரது மாமனார் தெரிவித்தார். போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.