கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி ஊழியரென அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு பெண்ணுக்கு புது கிரெடிட்கார்டு மற்றும் நகரத்திலுள்ள ஒரு விளையாட்டு கிளப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை கொடுப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதை உண்மை என நம்பிய அப்பெண் புது கிரெடிட்கார்டை எடுக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து செயல்முறையை துவங்க, அப்பெண் தன் ஆதார் அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி மட்டுமே கிரெடிட்டை செயல்படுத்த முடியும் என மோசடி செய்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்பெண் ஐபோனைப் பயன்படுத்துவதால் ஆண்ட்ராய்டு மொபைல் வாயிலாக இந்த செயல்முறையை மோற்கொள்ளுமாறு மோசடி நபர் அறிவுறுத்தினார். அதன்பின் ஆண்ட்ராய்டு மொபைல் அனுப்ப அந்நபர் முகவரி கேட்க, அதனையும் கொடுத்துள்ளார். அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்ட பின் அழைப்பின் அதே நாளில் அப்பெண்ணுக்கு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கிடைத்தது. அந்த மொபைல் போனில் டாட் செக்யூர் மற்றும் செக்யூர் என்வாய் அதென்டிகேட்டர் என 2 செயலிகள் ஏற்கனவே நிறுவபட்டு இருந்திருக்கிறது.

போனை பெற்ற பின் மோசடி செய்பவர் அப்பெண்ணிடம் தன் சிம் கார்டை புதிய தொலைபேசியில் சொருகவும், கிரெடிட்கார்டை செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க வழிமுறைகளை பின்பற்றவும் கூறினார். அதனை தொடர்ந்து அந்த பெண் மொபைலில் ஆக்டிவேட் ஆன பிறகு கிரெடிட் கார்டிலிருந்து 7 லட்சம் வாங்கிய செய்தி வந்தது. பெங்களூரிலுள்ள நகைக் கடையில் இருந்து இந்த பரிவர்த்தனை நடந்து உள்ளது. செய்தி வந்ததும் அப்பெண் மோசடியை உணர்ந்தார். வங்கி மூடப்பட்டதால் மோசடி நடந்த நாளில் பரிவர்த்தனையை அந்த பெண்ணால் சரிபார்க்க முடியவில்லை. அடுத்த நாள் மோசடி பற்றி புகாரளித்தார். அதன்பின் அந்த பெண் வங்கியை தொடர்பு கொண்டு போலீசில் வழக்குப்பதிவு செய்தார். தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.