
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் பங்கேற்பார்கள். இதனை அடுத்து பிரயாக்ராஜ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திருவிழாவை குறித்தும், இந்து தெய்வங்களை குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவரின் பெயர் கம்ரான் ஆல்வி, மற்றொருவர் அபிஷேக்குமார் ஆகியோர் பதிவு செய்த கருத்துக்கள் இந்து மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாரபங்கி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரி அலோக்மணி திரிபாதி கூறியுள்ளார், கம்ரான் ஆல்வி மகா கும்பமேளா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது இந்து மத தெய்வங்களை அவதூறாக சித்தரிப்பது போன்று உள்ளதால் உயர் அதிகாரிகள் இந்த வீடியோவை ஆய்வு செய்து கம்ரான் ஆல்வியை கைது செய்ய உத்தரவிட்டனர். மேலும் கம்ரான் ஆல்வி சமூக வலைதளங்களில் தன்னை ஒரு செய்தியாளராக கணக்குத் தொடங்கி 9000 பாலோவர்களை கொண்டுள்ளார்.
இவர் மீது மத உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் நோக்கில் தவறான செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான அபிஷேக் குமார் ஜெய்ப்பூர் அருகே உள்ள போஜா கிராமத்தில் வசித்து வருபவர். இவர் மகா கும்பமேளா குறித்து ஆட்சேபனை தெரிவித்து பதிவு வெளியிட்டிருப்பதால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். என ஜெய்ப்பூர் காவல் நிலைய அதிகாரி அமித் பிரதாப் சிங் கூறியுள்ளார்.