நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது மக்களவை தேர்தல்.

543 தொகுதிகளுக்கான தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக அறிவித்து வருகின்றனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர், மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாட்டில் 49.72 கோடி ஆண் வாக்காளர்கள், 47.15 கோடி பெண் வாக்காளர்கள், 48,044 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நாட்டில் 18 முதல் 19 வயதில் 1.84 கோடி இளம் வாக்காளர்களும், 20 முதல் 29 வயதில் 19.74 கோடி இளம் வாக்காளர்களும் உள்ளனர்.  1.82 கோடி பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள், 82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட வரும் நாடாளுமன்ற தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த தரத்தில் தேர்தலை நடத்த நான் உறுதியளிக்கிறேன்.1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர். 100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

97 கோடி வாக்காளர்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள், 1.5 கோடி வாக்குச் சாவடி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் தேர்தலில் தரமும் தகுதியும் எப்போதும் சிறப்பாக இருக்கும். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசியுள்ளேன். மக்களவைத் தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான். இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

நாட்டிற்கு உண்மையான பண்டிகை, ஜனநாயக சூழலை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 17வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16, 2024 அன்று முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2024 இல் முடிவடைகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை பறக்கும் படை அதிகம் அமைக்கப்படும். பண விநியோகம், பரிசுப் பொருள் விநியோகத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரச்சார இரைச்சல், மறு தேர்தல் வாய்ப்பை குறைக்கவும், வன்முறை இன்றியும் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும். தேர்தலில் ரத்தக்களரி மற்றும் வன்முறைக்கு இடமில்லை…எங்கிருந்து வன்முறை பற்றிய தகவல் கிடைத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். குற்ற பின்னணி வேட்பாளர் விவரங்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ட்ரோன்கள் மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.  தேர்தலின் போது வாக்காளர்கள் வேட்பாளர்கள் பயன்படுத்த 27 ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன தேர்தல் முறைகேட்டை சி விஜில் ஆப் மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். 11 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பணம் பரிசு பொருள் பறிமுதல் 835 சதவீதம் அதிகரித்துள்ளது. 11 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ₹3,400 கோடி ரொக்கம் பரிசு பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் பெற்று வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரண்டர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதுபான ஆலைகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் கண்காணிக்கப்படும். வங்கிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணத்தை வாகனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்தல் தொடர்பான போலி செய்திகளை நீக்கும் அதிகாரம் நோடல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். ஜாதி மத ரீதியில் தேர்தல் பிரச்சாரம் எக்காரணம் கொண்டு அனுமதிக்கப்படாது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை பரப்புவோர்கள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமான பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உட்பட யார வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் வதந்தி பரப்ப கூடாது. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும்.
நட்சத்திர பேச்சாளர்கள் மேடை நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும். முதல்கட்டமாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம், ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டம், மே 7-ம் தேதி மூன்றாம் கட்டம், மே 13-ம் தேதி நான்காம் கட்டம், மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டம், மே 25-ம் தேதி ஆறாம் கட்டம், ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்டம் என தேர்தல் ஆணையர் ராஜீவ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் :

அதன்படி வேட்புமனு தாக்கல் துவக்கம் – மார்ச் 20

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 27

வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28

திரும்ப பெற கடைசி நாள் – மார்ச் 30

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4

தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது…