
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் தெலுங்கு தேச கட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, கடந்த 2024 தேர்தலில் நமது கட்சியின் வெற்றி அசாதாரணமானது.
இதற்கு மிக முக்கிய காரணம் கட்சிக் கொடியை ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் மட்டுமே. மாநிலம் முழுவதும் 93% ஸ்ட்ரைக் ரேட் உடன் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தோம். மேலும் நமது கட்சி முடிந்து விட்டது எனக் கூறியவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள்.
இதுவரை 43 ஆண்டுகால அரசியலில் எந்த கட்சியும் சந்திக்காத நெருக்கடிகளை நாம் சந்தித்தோம் ஆனால் கட்சி கொடியை தாழ்த்தாமல் போராடிய உங்களால் மட்டுமே எல்லாம் சாத்தியமானது எனக் கூறியவர். மேலும் நாட்டின் ஊழலை ஒழிக்க வேண்டும் எனவும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசி அவர், மத்திய அரசு ரூபாய் 2000 நோட்டுகளை திரும்ப பெற்றது போல் ரூபாய் 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். தற்போது உள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனை காலகட்டத்தில் பெரிய மதிப்பிலான ரூபாய் 500, ரூபாய் 1000, ரூபாய் 2000 நோட்டுகள் தேவையற்றவை. அவை அனைத்தையும் திரும்ப பெற்றால் முழுவதுமாக ஊழல் ஒழிக்கப்படும் இதுவே சிறந்த வழி எனவும் தெரிவித்தார்.