தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத் ரவுத்தர் இறந்துவிட்டார். இந்த நிலையில் போலி ஆதார் கார்டு தயார் செய்து கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காஜா பேட்டை உஸ்மான் ரஹீம் கான் என்பவர் போலி ஆவணப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் போலி ஆவணம் கண்டறியப்பட்டு பாபநாசம் சார்பதிவாளர் காவியா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் பாபநாசம் அருகே பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த முகமது யூசுப் அலி(50), திருச்சி காஜா பேட்டை சேர்ந்த உஸ்மான்(60), திருப்பாலைத்துறை பகுதியை சேர்ந்த அப்துல் காதர்(58), தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்(38) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதன்பின் தஞ்சை எஸ்.பி.  ராஜா ராமன் உத்தரவின்படி பாபநாசம் டி.எஸ்.பி முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர் இணைந்து போலி ஆவணம் தயாரித்தல்,  ஆள்மாறாட்டம் போன்ற வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் கனி 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.