அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்கின்றனர்.

பொதுச்செயலாளராக EPS பொறுப்பேற்றதும் அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாகவும், அனைவரும் அதிமுகவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அமமுக நிர்வாகிகள் பல மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவில் இணைந்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் பரமக்குடியிலிருந்த அ.ம.மு.க-வினர் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர். அதோடு தங்களின் தாய்க் கழகமான அதிமுகவில் அவர்களை இணைத்துக்கொண்டனர்.

பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் அதிகமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.