நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலையத்தின் இயக்குனர் பாபுராஜ் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை துணை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை ஊழியர்கள் தேசிய கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின் மோப்ப நாய்கள் மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில், டீன் ரத்தினவேல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் இதில் மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை முதல்வர் தனலட்சுமி, மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையில் உள்ள ரெயில்வே காலனி மைதானத்தில் கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதன் பிறகு மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இவ்வாறு நேற்று பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.