நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

இப்போது மாநிலத்தில் கொரோனா லேசான அறிகுறிகளுடன் பரவி வருவதாக தகவல் தெரிவிக்கிறது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் முடிந்தவரை நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் மோசமடைந்தால் (அ) ஆக்ஸிஜன் செறிவு குறைந்தால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டது. மருத்துவ ஆலோசனையின்றி ஆண்டி பயாடிக் (அ) இருமல் சிரப்களை எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவசர காலங்களில் மாநில ஹெல்ப்லைன் 14416-ஐ மக்கள் பயன்படுத்தி அழைக்கலாம் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியது.