தமிழ்நாட்டின் முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு ஒன்றை அளித்தார். இதில், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,151 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதன்மையான கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த திட்டங்கள் மாநிலத்தின் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களும் அவர்களுடைய படகுகளும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இவை தவிர, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-ஆவது ரயில் வழித்தடத்திற்கு அனுமதி வழங்குதல், சேலம் உருக்காலையின் கூடுதல் நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவாக மாற்றுவதற்கான அனுமதி ஆகியவை உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் இந்த மனுவில் அடங்கியுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
