அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் அதிகாரமிக்க தலைவர் ஆனார் என அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து அவர் சட்டரீதியான போராட்டங்கள் நடத்தி வருகிறார். அவர் நடத்தியவரும் சட்ட ரீதியான போராட்டங்களில் அடுத்தடுத்து அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வந்து கொண்டே இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் எடப்பாடிக்கு எதிராக இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளது அதிமுக தலைமை நடுங்கச் செய்துள்ளது.

ஜனவரி 5ஆம் தேதி சென்னை மாஸ்டர் நீதிமன்றத்திலும்,  ஜனவரி 23ஆம் தேதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக இருக்கிறார்.  இந்த இரண்டு வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அதிமுகவில் அனைவரையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

கொடநாடு  கொலை – கொள்ளை வழக்கில் டெல்லி சேர்ந்த பத்திரிக்கையாளர் மேத்யூ சாம்வேல் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் எனக்கூறி ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்தது.

இந்த நிலையில்  மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது வீட்டிலேயே சாட்சிகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக சாமுவேல் மேத்யூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என தெரிவித்த நீதிபதிகள்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல் வழங்க அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினுடைய விசாரணையை ஜனவரி 5ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

அதே போல, அதிமுகவினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தமக்கும், தமது நற்பயிருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.சி பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கே.சி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்த ஜார்ஜ் டவுன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும்,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிசாமிாமி தொடர்ந்து வழக்கு நீதிபதி டி திருமால் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகும்படி சமன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார். இதனால் புது வருடத்தின் முதல் மாதத்தில் அடுத்தடுத்து 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.