தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 15-ந்தேதி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் தங்களது பெயரை நாளை (பிப் 11) இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதனுடன் பங்கேற்க விரும்பும் வீரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 2 தவணை கொரோனா தடுப்பூசி  போட்டதற்கான சான்றிதழ், வயது சான்றிதழ் இவற்றையும் சேர்த்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

மேலும் போட்டிக்கு வரும் வீரர்கள் நிகழ்ச்சி நடக்கும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இதனையடுத்து போட்டியில்  கலந்து கொள்ளும் மாடுகளை பற்றிய விவரங்களையும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அதனுடன் மாட்டின் உரிமையாளர்கள் பெயர், அவரின் புகைப்படம், ஆதார் எண், கால்நடை மருத்துவரிடம் பெற்ற காளைக்கான உடல் தகுதிச்சான்று ஆகியவற்றை நாளை இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதன் பின் பதிவு செய்தவர்களின் சான்றுகளை சரிபார்த்தவுடன் பதிவு செய்த காளைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்யப்படும், அந்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப் படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.