இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 14 வழித்தடங்களில் மொத்தம் 18 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. விமானத்திற்கு இணையான வசதிகள் வந்தே பாரத் ரயிலில் கிடைப்பதோடு அதிவேக ரயில் சேவையாகவும் இருப்பதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் அதன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மேற்குவங்கம், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக தற்போது ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் 5 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இன்றி மற்ற ரயில்கள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை சிறு தண்டனை கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.