இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் அடிக்கடி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கிடைக்காமல் போகலாம். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சீட் கிடைக்காவிட்டால் பயணிகளுக்கு அது மிகப்பெரிய சிரமமாக அமைந்து விடும். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் ஆர்டிஐ அலுவலர் சந்திரசேகர் கவுர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆர்டிஐ அலுவலகத்தில் ரயில்களில் காத்திருப்பு வகுப்பு டிக்கெட்டுகள் குறித்து கேட்டார்.

இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் 2022-23 ஆம் ஆண்டில் காத்திருப்பு வகுப்பு டிக்கெட் உறுதி செய்யப்படாததால் 2.7 கோடி பேர் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனது. இது 2021-22 ஆம் நிதி ஆண்டில் 1.65 கோடியாக இருந்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த நிதி ஆண்டில் பிஎன்ஆர் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்படாததால் மொத்தம் 1.76 கோடி டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதால் 2.72 கோடி பேர் பயணம் செய்ய முடியாமல் போனதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.