
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ் என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கிருந்து இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று தர்னேஷ் வீட்டில் மின்விசிறி சரியாக ஓடாததால் அதனை சரி பார்க்க கழட்டி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவரை தூக்கி எறிந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து தர்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கல்யாணமான சில நாட்களிலேயே மணமகன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.