
டெல்லியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட குருகிராமைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவன மேலாளர் தொடர்பான வழக்கு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவ இடமான காக்ரோலா பகுதியில், அவரது கார் சாக்கடை அருகே திறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தற்கொலை என சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். அதில், காணாமல் போவதற்கு முன்பு அந்த நபர் தனது மொபைல் போனை முற்றிலும் அழித்திருந்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் அவர் திட்டமிட்ட சதியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், மொபைல் நெட்வொர்க் டிரேசிங் மூலமாக அவர் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருப்பது கண்டறிந்தனர். அங்கு உள்ள தர்மசாலையொன்றில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவருக்கு லட்சக்கணக்கான கடன் இருப்பதும், அந்தக் கடனில் இருந்து தப்பிக்க தான் ‘காணாமல் போனது போல’ நாடகத்தை உருவாக்கியதும் தெரியவந்தது. இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறைக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.