ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் மந்தராயல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வரும் பன்னே சிங் என்பவர் தன்னுடைய மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்ற போது பன்னே சிங் தன்னுடைய ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக சம்பல் ஆற்றுக்கு சென்றுள்ளார். அவர் ஆற்றுக்குள் இறங்கிய போது திடீரென தண்ணீருக்குள் இருந்த ஒரு முதலை அவரின் காலை பிடித்து இழுத்தது. இதனால் பன்னே சிங் வலி தாங்க முடியாமல் அலறினார்.

அவரின் சத்தத்தை கேட்டு விமல் பாய் அங்கு ஓடி வந்து ஒரு தடியை எடுத்து முதலையை அடித்தார். இருப்பினும் முதலை விடாமல் பன்னே சிங்கை தண்ணீருக்குள் இழுக்க முயற்சித்தது. இதனால் தடியை வைத்து முதலையின் கண்களில் விமல் பாய் குத்தினார். அதன்பிறகு முதலை அங்கிருந்து செல்ல கணவன் மற்றும் மனைவி பத்திரமாக கரைக்கு திரும்பினர். முதலை கடித்ததால் காலில் காயங்களுடன் பன்னே சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் முதலையை பார்த்து பயப்படாமல் துணிச்சலாக தன் கணவரை காப்பாற்றிய விமல் பாய்க்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.