மும்பையில் உள்ள தாராவியில் கோரை என்ற கிராமத்தில்  மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போரிவ்லி காவல் துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக  விற்கப்பட்ட சுமார் 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 15000 ரூபாய் ஆகும். இதனை அடுத்து காவல்துறையினர் மளிகை கடைக்காரரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இந்த மளிகை கடையை நடத்தி வந்தது மஹிபால் சிங் ரத்தோட் (21) என தெரியவந்தது. இவர் தொலைதூரக் கல்வியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையில் தனது தந்தையின் கடையை எடுத்து நடத்தி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் கடந்த ஒரு மாதமாக தனது கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. ஒரு கிலோ கஞ்சா வாங்கி அதனை 7 கிராம், 20 கிராம், 50 கிராம் என சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து, முறையே ரூபாய் 200, ரூபாய் 500, ரூபாய் 1500 என கிராமிற்கு ஏற்ப விற்பனை செய்துள்ளார்.

கஞ்சா பொட்டலங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் “அரிசி” என்ற வார்த்தையை குறியீட்டாக பயன்படுத்தி உள்ளனர். அரிசி என கேட்டாலே கடையில் கஞ்சா வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் போதை மருந்து மற்றும் மன நோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் ரத்தோட் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்பு காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.