தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து ஆளும் கட்சியான திமுக அரசுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவிப்பதாவது, தமிழக, கேரள மாநிலங்களின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை கேரள மருத்துவ கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக மாற்ற தமிழக முதலமைச்சர் அனுமதித்துள்ளார். இந்த கழிவுகளில் கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழகத்தின் தென் மாவட்ட எல்லைகள் குப்பை கிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தினந்தோறும் லாரிகளில் கழிவுகள் கொண்டுவரப்படுகிறது. இதனை கவனிக்கும் சோதனை சாவடிகள் வெறும் வசூலிக்கும் மையங்களாகவே மாறிவிட்டன. திமுக அரசு தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக அனுமதி அளித்து வருகிறது. இது குறித்து பலமுறை முதலமைச்சருக்கும் அவரது தனி பிரிவுகளுக்கும் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதனை தடுத்து நிறுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக எல்லையோர மாவட்டங்களில் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே “பொதுமக்களோடு இணைந்து லாரிகளில் எல்லை ஓரங்களில் உள்ள அனைத்து மருத்துவ கழிவுகளையும் ஏற்றி கேரளாவில் கொண்டு கொட்டி விடுவோம். முதலில் நானே லாரியில் ஏற்றிக் கொண்டு செல்வேன்” என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.