சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்கும். அந்த தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் NRI வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்றடையும்.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த 3 நபர்கள் வெளிநாட்டிலுள்ள ஒருவர் இறந்து விட்டதாக கூறி NRI உதவி தொகை பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து சென்னை மாவட்ட கலெக்டரிடம் இருந்து ரூ. 11.63 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். தற்போது இதனை கண்டறிந்த துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி விசாரணை செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்தனர். அப்போது அந்த  நபர்களில் 2 பேர் அரசு ஊழியர்களான சுப்பிரமணி, பிரமோத் என்பதும் தெரியவந்தது. இவர்கள் NRI உதவித் தொகை பெறும் பயனாளி போன்று தினேஷ் என்பவரை நடிக்க வைத்து பண மோசடி செய்துள்ளனர் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில்  தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.