தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர் பதவிக்கு சிலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது நகராட்சி நிர்வாக துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா தான் தலைமைச் செயலாளராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவருடைய சொந்த மாநிலம் ராஜஸ்தான். 30 வருடங்கள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சிவதாஸ் மீனா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒருவராகவும் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிவதாஸ் மீனா மத்திய அரசின் பணிக்கு மாற்றப்பட்ட நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பணியில் பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பை ஏற்ற உடன் சிவதாஸ் மீனா மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இவருக்கு நகராட்சி நிர்வாக துறை செயலாளர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் திறமையாக செயல்பட கூடியவர். இவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சீனியர். மேலும் இது போன்ற பல்வேறு காரணங்களால் சிவதாஸ் மீனாவுக்கு தான் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.