ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த அகெல் நஸிர் என்ற முதியவர், தனது வயது 140 எனக் கூறியதையடுத்து, தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தனது பிறப்புக்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லாத நிலையில், இதை உறுதி செய்ய அந்த நாட்டின் பதிவு அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தனது வாழ்நாளில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் நஸிர், எனக்கு 30 வயதாக இருக்கும் போது, கடந்த 1919ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் ஆப்கான்–ஆங்கில போரின் வெற்றியை கொண்டாடியதாக கூறியுள்ளார்.
அப்போதைய ஆப்கானிஸ்தான் அரசர் அமானுல்லா கானின் மாளிகையில் நடந்த கொண்டாட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக நஸிர் கூறியுள்ளார். ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து வெளியேற்றியதற்காக மன்னருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் இப்போது உயிருடன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது பல தலைமுறை சந்ததியுடன் வாழ்ந்து வருகிறார் எனவும், அவரது குடும்பத்தினர் அவரது கூற்றை உறுதியாக நம்புகின்றனர். இந்த தகவல் தலிபான் அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு, முதியவரின் வயதை உறுதி செய்ய சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
“இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்த விவரங்களை சர்வதேச அளவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாகாண செய்தித் தொடர்பாளர் முஸ்தக்ஃபார் குர்பாஸ் தெரிவித்துள்ளார். இதுவரை, உலகில் மிக அதிகம் வாழ்ந்தவர் ஜீன் கால்மண்ட் என்பவர் ஆவர். இவர் 1875ல் பிறந்து, 1997இல் 122 வயதில் மரணமடைந்தார். அகெல் நஸிரின் தகவல் உறுதியானால், அந்த சாதனையை முறியடிக்கலாம் என கருதப்படுகிறது.