இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே உருவான சமீபத்திய பதற்றம் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது உலகின் பல பகுதிகளில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விவாதங்களுக்கு இடம் கொடுக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது, அதற்கான விலையை ஈரான் கட்ட வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார். இதனால் இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி, “தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்” எனப் பேசி மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளார்.

இந்த விவகாரத்தின் பின்னணியில், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்காக இந்த நாடுகள் தங்களின் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதித்தால், ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ரகசிய சேனல்களில் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், மத்திய கிழக்கில் நிலவும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் வெடித்தால், அது உலகின் கச்சா எண்ணெய் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.