கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வருபவர் 26 வயதுடைய இளம்பெண். இவர் கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவை சேர்ந்த பாக்கிய அருண்(26) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாக்கிய அருண் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். அதனை நம்பிய அந்தப் பெண்ணும் அவருடன் காதல் உறவில் பழகி வந்துள்ளார். அப்போது பாக்கிய அருண் தான் புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இதனால் அந்தப் பெண் பல தவணைகளாக ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம் பணமும், 81/2 பவுன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார். பணம், நகை பெற்றுக்கொண்ட பின் பாக்கியஅருண்  அந்தப் பெண்ணுடன் ஆன உறவை தவிர்த்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி அவரிடம் சென்ற கெஞ்சியுள்ளார். அதற்கு பாக்கியஅருண் திருமணம் செய்ய முடியாது எனவும், பணம் மற்றும் நகைகளை திரும்பிக் கொடுக்கவும் மறுத்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ நாளன்று பீளமேடு அருகில் பாக்கியஅருணை சந்தித்த அந்தப் பெண் நகை பணத்தை கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு பாக்கியஅருண் அந்தப் பெண்ணை தகாத முறையில் திட்டியும், கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கந்தசாமி பாக்கியஅருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த விசாரணையில் பாக்கிய அருண் சமீபகாலமாக கோயம்புத்தூர் ரெட்பில்ட் பகுதியில் வசித்து வந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.