இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மிகப்பெரிய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, எங்களின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று பாபர் அசாம் கூறினார்.

2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மழை காரணமாக 2 நாட்களாக நடைபெற்றது. அதாவது ரிசர்வ் தினத்தில் (செப்டம்பர் 11) போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய,  துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

இதையடுத்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. கே.எல்.ராகுல் (17), விராட் கோலி (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. பின்னர் போட்டி ஒரு நாள் கழித்து அதாவது ரிசர்வ் நாளில் (செப்டம்பர் 11) நடைபெற்றது.

ரிசர்வ் நாளில்  இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் வலுவான இன்னிங்ஸ் விளையாடினர். ராகுல் தனது 6வது சதத்தையும், கோலி தனது 47வது ஒருநாள் சதத்தையும் அடித்தார். ரிசர்வ் நாளில், ராகுல் மற்றும் கோலி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 106 பந்துகளில் 111 ரன்களும், கோலி 94 பந்துகளில் 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவருக்கும் இடையே 194 பந்துகளில் 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. கோலி-ராகுலின் இந்த இன்னிங்ஸால் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தது.  பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய   பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபகார் ஜமான் மட்டுமே 27 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஆகா சல்மான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர்  தலா 23 ரன்கள்எடுத்தனர். இது தவிர கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்தார். இது தவிர பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எவராலும் 10 ரன்களை கூட எட்ட முடியவில்லை. இந்த  போட்டியில், பாகிஸ்தானின் 2 கிரிக்கெட் வீரர்கள் (நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப்) காயமடைந்ததால், அவர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனால் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்திய அணி.

தோல்விக்குப் பிறகு பாபர் என்ன சொன்னார்?

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு, இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டமிட்டுச் சென்றனர் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறினார். பாபர் அசாம் கூறியதாவது, வானிலை எங்கள் கைகளில் இல்லை, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். எங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை திட்டமிட்டு சிறப்பாக தொடங்கினர். இதையடுத்து விராட் மற்றும் ராகுலும் அதை முன்னோக்கி எடுத்து முடித்தனர்”என்றார்.

பேட்ஸ்மேன்களிடம் பாபர் ஏமாற்றம் அடைந்தார் :

பாகிஸ்தான் கேப்டன் அவரது பேட்டிங்கில் ஏமாற்றம் அடைந்தார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் தனது பேட்ஸ்மேன்களால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை என்று அவர் கூறுகிறார். பாபர் மேலும் கூறுகையில், ‘முதல் 10 ஓவர்களில் ஜஸ்பிரீத் மற்றும் சிராஜ் நன்றாக பந்துவீசி பந்தை இருபுறமும் ஸ்விங் செய்தார்கள், ஆனால் எங்கள் பேட்டிங் எதிர்பார்த்தபடி இல்லை. எங்களால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முடியவில்லை” என்று கூறினார்.