நேபாள அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

2023 ப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே நேரத்தில் நேபாளம், ஹாங்காங் மற்றும் மலேசியா அணிகள் தகுதிசுற்றில் வெற்றிபெற்றதன் மூலம்  காலிறுதி சுற்றுக்கு வந்தன. இந்நிலையில் சீனாவின் ஹாங்சோ மைதானத்தில் இன்று முதல் காலிறுதியில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தார். இதையடுத்து  கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். இதில் ருதுராஜ் பொறுமையாக தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி என அடித்து மிரட்டினார். ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்திய அணி 9.1  ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதன் பிறகு  ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து  ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறிய மைதானமாக இருந்தாலும் இந்திய தொடக்க பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

இருப்பினும் ஜெய்ஸ்வால் மட்டும் மறுமுனையில் அதிரடியாக ஆடினார். இதையடுத்து சிவம் துபே –  ஜெய்ஸ்வால் இருவரும் கைகோர்த்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக 48 பந்துகளில் (8 பவுண்டரி, 7 சிக்ஸர்) சதம் அடித்தார். அதன்பின் அவர் 17வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அவுட் ஆனார். தொடர்ந்து துபே மற்றும் ரிங்கு சிங் இணைந்து ஆடினர்.

இருவரும் கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்களுடனும், ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து நேபாள அணி களமிறங்கி இலக்கை துரத்தியது.

நேபாள அணியில் குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி இலக்கை துரத்தினர். இதையடுத்து ஆவேஷ் கான் வீசிய 4வது ஓவரில் ஆசிப்  10 ரன்னிலும், தொடர்ந்து சாய் கிஷோர் வீசிய 9வது ஓவரில் குஷால் புர்டெல் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து குசால் மல்லா 29 ரன்கள் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோயின் 11 வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ரோகித் பவுடல் 3 ரன்னில் ரவி பிஷ்னோயின் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து தீபேந்திர சிங் – சந்தீப் ஜோரா இருவரும் ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து தீபேந்திர சிங் அதிரடியாக 15 பந்துகளில் 32 ரன்களும், சந்தீப் ஜோரா 12 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சோம்பால் கமி 7, குல்சன் ஜா6 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

நேபாள அணி  8 விக்கெட் இழந்த நிலையில், கடைசி இரண்டு ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. கரன் மற்றும் சந்தீப் லமிச்சனே இருவரும் களத்தில் இருந்தனர். ஆவேஷ் கான் வீசிய 19ஆவது ஓவரில் நேபாள அணி 11 ரன்கள் எடுத்த நிலையில், லமிச்சனே(5) அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நேபாள அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.நேபாள அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.இந்திய அணியில் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

நேபாளத்துக்கு எதிரான இந்திய அணி :

ருதுராஜ் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங்.