ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தேசிய கீதத்தின் போது சாய் கிஷோர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா – நேபாளம் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி (கால்இறுதி) நடைபெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணிக்காக ஸ்பின்னர் சாய் கிஷோர் அறிமுகமானார். இந்திய ஜெர்சியை அணிந்திருக்கும் சாய் கிஷோர், போட்டிக்கு சற்று முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட சாய் கிஷோரின் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா – நேபாளம் இடையிலான ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதிப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் சாய் கிஷோரைத் தவிர, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவும்  இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். ஜிதேஷ் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சாய் கிஷோர் ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக ஆடியுள்ளார் :

26 வயதான சாய் கிஷோர் பற்றி பேசுகையில், அவர் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர தமிழகத்துக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 30 முதல்தர, 46 லிஸ்ட் ஏ மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் 26.58 சராசரியில் 113 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர லிஸ்ட் ஏ போட்டிகளில் 23.13 சராசரியில் 73 விக்கெட்டுகளை சாய் கிஷோர் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் 16.19 சராசரியில் 57 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டி20யில் சாய் கிஷோரின் எக்கனாமி 5.48 என சிறப்பாக உள்ளது.

சாய் கிஷோரின் அறிமுகம்:

தனது அறிமுகப் போட்டியில் சாய் கிஷோரின் ஆட்டத்தை பற்றி பேசுகையில், அவர் நேபாளத்திற்கு எதிரான தனது 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்தார். குறுகிய பவுண்டரி எல்லைகள் கொண்ட இந்த மைதானத்தில்   இது ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். 

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி :

ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இறுதியில், ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இந்தியா இன்னிங்ஸை வலுவாக முடிக்க உதவினார். பின்னர் ஆடிய நேபாள அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் இருவர் ஆடும் லெவனில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் லெவன் :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர்,  சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.