வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொதுவாக வெளிநாட்டில் வாழும் மக்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் ரெமிட்டன்ஸ் என அழைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எந்த நாடு அதிக ரெமிட்டன்ஸ் தொகையை பெறுகின்றது என கணக்கெடுப்பு நடக்கும். எப்போதும் இந்தியாவுடன் போட்டி போடும் சீனா இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் உலகிலேயே அதிக ரெமிட்டன்ஸ் தொகையை பெற்ற நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் முறையாக ஒரு வருடத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை இந்தியா ரெமிட்டன்ஸாக பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் ரெமிட்டன்ஸ் தொகை 100 பில்லியன் டாலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை உறுதி செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாடுகளில் இருக்கும் NRI-க்களை இந்தியாவின் உண்மையான தூதர்கள் என பாராட்டினார். மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 2022-ஆம் ஆண்டு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்றும் இது கடந்த வருட அளவைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எப்போதும் இந்தியாவுடன் போட்டி போடும் சீனா இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.