2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. என்டிஎன் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் நாடு முதலிடம் பிடித்து வருகின்றது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் உலகில் 193 பகுதிகளுக்கு விசா இல்லாமலும் சில பகுதிகளுக்கு அங்கு சென்ற பிறகு விசா பெற்றுக் கொள்ளவும் முடியும்.

ஜப்பானை அடுத்து சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா நாடுகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா பாஸ்போர்ட் உள்ளவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமலும் சில பகுதிகளுக்கு அங்கு சென்ற பிறகு விசா பெற்றுக் கொள்ளவும் முடியும். சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடு கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமலும் சில பகுதிகளுக்கு அங்கு சென்ற பிறகு விசா பெற்றுக்கொள்ளவும் முடியும். இதனையடுத்து நான்காம் இடத்தில் பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர் ஆகிய நாடுகளும் ஐந்தாமிடத்தில் ஸ்வீடன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 87-வது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 85-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய நாட்டின் பாஸ்போர்ட் உள்ளவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமலும் சில பகுதிகளுக்கு அங்கு சென்ற பிறகு விசா பெற்றுக் கொள்ளவும் முடியும். 2023-ஆம் ஆண்டிற்கான மிக மோசமான பாஸ்போர்ட்டாக ஆப்கானிஸ்தான் 109 இடத்தை பெற்றுள்ளது.