கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றி. இந்த நாட்டின் குடிமகனாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி நாம் உலகத்திற்கே அளிக்கும் பாடமாகும். நாம் எப்போதும் பின் வாங்க மாட்டோம், யாருக்காகவும் அடிபணிய மாட்டோம் என்பதை இந்த வெற்றியின் மூலம் உலகத்திற்கு தெரிவித்துள்ளோம். நம் நாட்டில் பதட்டமான சூழல் ஏற்பட்ட போதும் சரியான வழிகாட்டுதல்களையும், திறமையான முடிவையும் எடுக்கும் ஒரு தலைவரை நாங்கள் பார்த்து விட்டோம். உங்களுக்கு ஆதரவாக கன்னடர்களும், கன்னட திரையுலகமும் எப்போதும் நிற்போம். நமது ராணுவம் உங்கள் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. இதுவே நம் நாட்டின் பெருமையாகும். நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், ஒரு குரல், ஒரு நாடாக செயல்படுவோம்” என்று கூறியிருந்தார்.